இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
தினத்தந்தி 15 July 2025 9:28 AM IST (Updated: 16 July 2025 9:13 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • பூமியை நெருங்கியது டிராகன் விண்கலம்
    15 July 2025 2:48 PM IST

    பூமியை நெருங்கியது டிராகன் விண்கலம்

    சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலம் பூமியை நெருங்கியது. 420 கி.மீ உயரத்தில் இருந்து விண்கலத்தின் உயரம் 320 கி.மீ உயரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.சற்று நேரத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் விண்கலத்தை தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.

    ஜூன் 25-ல் புறப்பட்ட சுபான்ஷு சுக்லா குழுவினர் மறுநாள் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். 18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பல ஆய்வுகளை செய்தனர் சுபான்ஷு சுக்லா குழுவினர். ஆய்வை முடித்து விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பூமிக்கு புறப்பட்டனர். டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்கு, 60க்கு மேற்பட்ட சோதனை தரவுகளுடன் பூமிக்கு திரும்புகிறது.

  • கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை
    15 July 2025 2:35 PM IST

    கோவை, நீலகிரிக்கு மிக கனமழை எச்சரிக்கை

    ஜூலை 17, 18 தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

  • பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த வேதாரண்யம் இளைஞர்
    15 July 2025 2:25 PM IST

    பேஸ்புக்கில் மலர்ந்த காதல்: பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம்பிடித்த வேதாரண்யம் இளைஞர்

    பிலிப்பைன்ஸை சேர்ந்த கேத்தியா ஜேட் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த வேதாரண்யத்தைச் சேர்ந்த அகிலரசன் என்ற இளைஞர். பேஸ்புக்கில் அறிமுகமான இருவரும், 7 ஆண்டுகளாக காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

  • மரண தண்டனை ஒத்திவைப்பு
    15 July 2025 2:20 PM IST

    மரண தண்டனை ஒத்திவைப்பு

    ஏமனில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைக்கொடுக்காத நிலையில், இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவர் அபுபக்கர் முப்தி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 15 July 2025 1:49 PM IST

    காமராஜர் பிறந்தநாள் - தவெக தலைவர் விஜய் மரியாதை

    பனையூர் அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

  • 15 July 2025 1:44 PM IST

    மாலை 4 மணி வரை கோவை, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு


    கோவை, தென்காசி மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

  • 15 July 2025 1:40 PM IST

    பாலியல் துன்புறுத்தல் வழக்கு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய ஐகோர்ட்டு தடை


    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். மேலும் இதுகுறித்து. அம்மாநில முதல்-மந்திரியின் தனிப்பிரிவிலும் புகார் மனு அளித்தார்.

    அந்த பெண் தனது புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாள் தன்னுடன் உறவில் இருந்ததாகவும், அப்போது தான் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி வாக்குறுதி அளித்து தன்னை ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அத்துடன் தன்னிடம் யாஷ் தயாளுடனான சேட்கள், ஸ்கிரீன் ஷாட்கள், வீடியோ அழைப்புகள் மற்றும் புகைப்படங்கள் ஆதரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

  • 15 July 2025 1:32 PM IST

    செஞ்சி கோட்டை விவகாரம்: அதிர்ச்சி தெரிவித்த சீமான்

    கோனேரிக்கோன் முன்னோர்களின் செஞ்சிக்கோட்டையை, மராத்திய கோட்டையாக அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், “செஞ்சி கோட்டையின் வரலாற்று திரிபை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசு சிறிதும் உணர்வற்று வேடிக்கை பார்க்கிறது . செஞ்சி கோனேரிக்கோன் கோட்டையை, மராத்திய கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தினார்.

1 More update

Next Story