இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 15 July 2025 8:18 PM IST
மயிலாடுதுறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்றார். மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மூலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- 15 July 2025 8:10 PM IST
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் , திருச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
- 15 July 2025 7:49 PM IST
சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்துள்ளதுபற்றி மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ஆக்சியம்-4 வரலாற்று திட்டத்தில் கேப்டன் சுபான்ஷு சுக்லா நல்ல முறையில் பூமிக்கு திரும்பியது, ஒவ்வோர் இந்தியனுக்கும் ஒரு பெருமையான தருணம்.
அவர் விண்வெளியை தொட்டு விட்டது மட்டுமில்லாமல், இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான அவருடைய பயணம் மற்றும் பூமிக்கு திரும்பி வந்தது என்பது, தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி நோக்கங்களுக்கு ஒரு பெருமையான தருணமும் ஆகும். அவருடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
- 15 July 2025 5:19 PM IST
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா புகார் கூறியுள்ளார்.















