இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 16 Aug 2025 11:01 AM IST
11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 16 Aug 2025 10:43 AM IST
தென்னிந்திய நடிகைகளுக்கு பாலிவுட்டில் நடந்த சம்பவம்; மதுபாலா வேதனை
ரோஜா, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் மதுபாலா. மதுபாலாவின் பேரழகும் அவரது நடிப்பும் தென்னிந்திய ரசிகர்களை மட்டும் இன்றி பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்து வந்தது. தமிழ் மலையாளம் தெலுங்கு மொழி படங்களில் நடித்த மதுபாலா இந்தி மொழியிலும் பல படங்களில் நடித்தார்.
- 16 Aug 2025 10:41 AM IST
ஜம்மு காஷ்மீர் வெள்ளம், நிலச்சரிவு: 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்
ஜம்மு காஷ்மீரில் வெள்ள மீட்பு நடவடிக்கையில், 3-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தால் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. மோப்பநாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 16 Aug 2025 10:39 AM IST
தொடர் விடுமுறை: கடந்த 2 நாட்களில் 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
- 16 Aug 2025 10:38 AM IST
சுதந்திர தின விழாவில் பங்கேற்காத கார்கே, ராகுல் காந்தி - பா.ஜ.க. கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், 'செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி புறக்கணித்து இருக்கிறார். இது ஒரு தேசிய கொண்டாட்டம். எந்த ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டமோ அல்லது எந்த கட்சியின் நிகழ்ச்சியோ அல்ல' என சாடினார்.
- 16 Aug 2025 10:35 AM IST
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
மறைந்த பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசனின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தியாகராய நகர் வெங்கட்நாராயணா மாநகராட்சி மைதானத்தில் பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
- 16 Aug 2025 10:11 AM IST
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 16 Aug 2025 10:04 AM IST
மேலும் குறைந்த தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன..?
7வது நாளாக இன்றும் தங்கம் விலை இறங்கு முகத்திலேயே தொடர்ந்து காணப்படுகிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,275க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.74,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 16 Aug 2025 9:50 AM IST
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு - குளிக்க தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்றும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- 16 Aug 2025 9:26 AM IST
மாஸ்கோவில் அடுத்த பேச்சுவார்த்தை - டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்த புதின்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நேற்று (15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.


















