இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Aug 2025 5:22 PM IST
அமெரிக்காவுக்கு படையெடுக்கும் ஐரோப்பிய தலைவர்கள்..?
வெள்ளை மாளிகையில் நாளை நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தையில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், அழைப்பை ஏற்று ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
- 17 Aug 2025 5:08 PM IST
அன்புமணி மீது விரைவில் நடவடிக்கை? - ஜி.கே.மணி பதில்
பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:-
ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது டாக்டர் ராமதாசால் அமைக்கப்பட்டது. அவர்கள் தயாரித்து கொடுத்த அறிக்கையை வேறுஒருவர் படிக்க இருந்த நிலையில், ராமதாசின் பரிந்துரையின் பேரில் நான் படித்தேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கை டாக்டர் ராமதாசிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் படித்துவிட்டு குழு அளித்த பரிந்துரையின்படி அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பார? அல்லது என்ன செய்யப்போகிறார்? என்பது தெரியவில்லை; அவருக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறினார்.
- 17 Aug 2025 3:37 PM IST
அரசுப் பள்ளிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக வழங்கிய முன்னாள் மாணவர்
தஞ்சாவூர் அருகே திருமங்கலக்கோட்டை கீழையூரில் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள 30,000 சதுர அடி நிலத்தை அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். முன்னாள் மாணவர் கோவிந்தராஜ் (80) குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் நிலத்தை வழங்கியுள்ளதாகவும், படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும், மாணவர்கள் நன்றாகப் படித்து ஊருக்கும் பெற்றோர்க்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- 17 Aug 2025 1:57 PM IST
ஆசிய கோப்பை: பாகிஸ்தான் ஸ்குவாடில் இடம்பெறாத பாபர் அசாம், முகமது ரிஸ்வான்
ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் ஸ்குவாடில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
சல்மான் அகா தலைமையில் பகர் சமான், ஷாஹீன் அப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 17 Aug 2025 1:52 PM IST
பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் துப்பாக்கி சூடு
அரியானா, குருகிராமில் பிரபல யூடியூபரும் பிக்பாஸ் ஓடிடி வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.அதிகாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால், சுமார் 10 -12 முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில் எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லையென தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 Aug 2025 1:11 PM IST
விமான நிலையத்திற்கு இணையாக எழும்பூர் ரெயில் நிலைய பணிகள் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், “நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.879 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
ரூ.800 கோடி செலவில் எழும்பூர் ரெயில் நிலையம் புதுப்பொலிவுடன், விமான நிலையத்திற்கு இணையாக தயாராகி வருகிறது” என்று கூறினார்.
- 17 Aug 2025 1:06 PM IST
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாமக பொதுக்குழுவில் பரிந்துரை
பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்புமணி மீது சுமார் 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ராமதாஸ் தரப்புப் பொதுக்குழுவில் பரிந்துரை செய்துள்ளது.
- 17 Aug 2025 12:42 PM IST
பாமக தலைவர் ராமதாஸ் தான்.. கூட்டணி முடிவை அவரே எடுப்பார்.. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதில் பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மேலும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசுக்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 17 Aug 2025 12:41 PM IST
நீலகிரியில் நியோ டைடல் பூங்கா
நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. குன்னுார் எடப்பள்ளி அருகே 8 ஏக்கரில் டைடல் பூங்கா அமைகிறது. சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த நியோ டைடல் பூங்கா மூலம், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.















