இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 17 Aug 2025 7:51 PM IST
சாக்குப் போக்குகள் தேவை இல்லை: தேர்தல் ஆணையத்தை சாடிய நடிகர் பிரகாஷ்ராஜ்
வாக்குத் திருட்டு விவகாரத்தில், "வாக்களிக்கும் பெண்களின் சிசிடிவி வீடியோக்களை தேர்தல் ஆணையம் பகிர வேண்டுமா?" என்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
“நீங்கள் அந்த சிசிடிவி கேமராக்களை வைப்பதற்கு முன் பெண்களிடம் அனுமதி வாங்கினீர்களா?. வாக்குச்சாவடி என்பது உடை மாற்றும் அறை இல்லை. உங்கள் வசதியான சாக்குப் போக்குகள் எங்களுக்குத் தேவை இல்லை. வெளிப்படைத் தன்மையே தேவை” என்று தெரிவித்துள்ளார்.
- 17 Aug 2025 7:22 PM IST
மீண்டும் போரை எதிர்கொள்ள நேரிடும் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
காசா போரை நிறுத்துவது மீண்டும் 'அக்டோபர் 7' சம்பவத்திற்கு வழிவகுக்கும் என்றும் காசா மீதான போரை தற்போது நிறுத்தினால் இஸ்ரேல் மீண்டும் முடிவு பெறாத போரை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசா, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
- 17 Aug 2025 6:56 PM IST
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- 17 Aug 2025 6:37 PM IST
விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை உடலுக்கு 4 அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
உடல்நலக்குறைவால் உயிரிழந்த விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு மற்றும் சி.வெ.கணேசன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- 17 Aug 2025 6:35 PM IST
வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே நள்ளிரவு ஆட்டோவில் பிரசவ வலி ஏற்பட்டு துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு, ரோந்து பணியிலிருந்த பெண் காவலர் கோகிலா பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
- 17 Aug 2025 6:31 PM IST
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி சொந்த ஊருக்கு சென்றவர்கள் அரசு பஸ், தனியார் பஸ், கார், வேன் போன்ற பல்வேறு வாகனங்களில் இன்று சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ஒரே நாளில் சென்னைக்கு ஏராளமான வாகனங்கள் படையெடுத்து வருவதால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடியே சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் சுங்கச்சாவடி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- 17 Aug 2025 5:48 PM IST
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
தென்காசியில் உள்ள குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர்.
- 17 Aug 2025 5:30 PM IST
இந்தியாவில் இ-சிம் சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல். நிர்வாகம்
சிம் கார்டு இல்லாமல் தொலைத்தொடர்பு சேவை பெறும் இ-சிம் (eSIM) சேவையை முதல்முறையாக தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தொடங்கி உள்ளது. படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஏற்கனவே இ-சிம் சேவையை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
- 17 Aug 2025 5:26 PM IST
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 18,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.














