இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 21-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Oct 2025 11:09 AM IST
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (அக்டோபர் 22) தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் 28-ம் தேதியும் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் திருச்செந்தூரில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- 21 Oct 2025 10:39 AM IST
ஓடிடியில் ஒரு உண்மை கிரைம் திரில்லர்...8.9 ரேட்டிங் பெற்ற படம்..எதில் பார்க்கலாம்?
இந்த வாரமும் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களுடன், வெப் தொடர்களும் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகி இருக்கின்றன.
அந்த வரிசையில் ஒரு கிரைம் படமும் வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது. சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் கூடிய இந்தப் படம் சில நிஜ சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தப் படம் ஐஎம்டிபியில் 8.9/10 ரேட்டிங் பெற்றுள்ளது.
- 21 Oct 2025 10:37 AM IST
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 21 Oct 2025 10:18 AM IST
மேட்டுப்பாளையம் - உதகை பாதையில் 3வது நாளாக மலை ரயில் சேவை ரத்து
ஊட்டி: கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் இரு இடங்களில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் 3வது நாளாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாறைகளை வெடி வைத்து தகர்த்து, அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- 21 Oct 2025 9:56 AM IST
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்ததாக 319 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 21 Oct 2025 9:49 AM IST
இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
தங்கம் விலை குறையுமா என எதிர்பார்த்த இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. தங்கம் விலை இன்று ஒரு கிராம் ரூ.260 உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனையான நிலையில், இன்று ரூ.188 ஆக விற்பனையாகிறது.














