இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 04-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 4 Jun 2025 4:19 PM IST
இளங்கலை மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு வரும் ஜீன் 6ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
- 4 Jun 2025 4:16 PM IST
ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினர் குறித்தும் சீமான் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. ஜூலை 7ம் தேதி விசாரணைக்கு நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும்; ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 4 Jun 2025 3:35 PM IST
த.வெ.க கொடி விவகாரம் - ஆனந்த் மனு தாக்கல்
பகுஜன் சமாஜ் கட்சி கொடிக்கும் தமிழக வெற்றிக்கழக கொடிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. த.வெ.க கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து பி.எஸ்.பி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்,
- 4 Jun 2025 3:32 PM IST
டீ குடிக்க சென்ற மேனேஜர் மின்சாரம் தாக்கி பலி
சென்னையில் டீ குடிக்க சென்ற இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், இன்சூரன்ஸ் நிறுவன பயிற்சிக்காக சென்னை வந்திருந்தார், வள்ளுவர்கோட்டம் பகுதியில் டீ குடிக்க சென்ற அவர் நடைபாதை பைப்பை பிடித்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
- 4 Jun 2025 3:24 PM IST
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- 4 Jun 2025 2:36 PM IST
தமிழ்நாட்டுக்கு நன்றி - கமல்ஹாசன்
"எனக்கு உறுதுணையாக நின்ற, நிற்கும் தமிழ்நாட்டுக்கு நன்றி. பேச வேண்டியது நிறைய இருக்கிறது எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டியது தமிழனாக எனது கடமை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
- 4 Jun 2025 1:38 PM IST
ஜூலை 21-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகார மந்திரி கிரென் ரிஜிஜு அறிவித்துள்ளார்.
- 4 Jun 2025 1:19 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள சிவராம சுப்ரமணிய சாஸ்திரி, 12.05 முதல் 12.45 வரை குடமுழுக்கு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார்.
- 4 Jun 2025 1:16 PM IST
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இவ்வருட பிரதிஷ்டை தினம் நாளை (5ம் தேதி) ஆகும்; இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.
- 4 Jun 2025 1:15 PM IST
சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் பறவைகளை விரட்ட புதிய கருவி
சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளில், விமான போக்குவரத்துக்கு இடையூறாக, பறக்கும் பறவைகளை விரட்டுவதற்கு, "தண்டர் பூம்ஸ்" என்ற இடி ஓசை ஒலி எழுப்பக்கூடிய, புதிய கருவிகள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவரையில் பட்டாசுகள் வெடித்து ஒலி எழுப்பி, பறவைகள் விரட்டப்பட்டு வந்தன. அதில் 100% பலன் கிடைக்காததால், இந்த புதிய முறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது.















