இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 06-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 July 2025 1:19 PM IST
பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஆகஸ்டு 15-ந்தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வுக்கு நாம் சுமை அல்ல. கூட்டணியில் நாம் இடம் பெற்றிருப்பது அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும் என காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் நாம் செயலாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த தேர்தலில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகியவை நமக்கான சவாலாக உள்ளன. இதேபோன்று தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஆபரேஷன் சிந்தூர், அ.தி.மு.க. கூட்டணி ஆகியவை சாதகங்களாக உள்ள விசயங்களாக பார்க்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 6 July 2025 1:18 PM IST
திபெத்திய புத்த மத துறவியான தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அவருக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் 140 கோடி இந்தியர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் நீடித்த அடையாளம் அவர் என பதிவிட்டு உள்ளார்.
- 6 July 2025 11:30 AM IST
பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார்.
அப்போது இந்திய வம்சாவளியினர், பிரதமரை வரவேற்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் அடிப்படையிலான கருத்துருவை கொண்ட சிறப்பு கலாசார நடனம் ஒன்றை ஆடினர்.
- 6 July 2025 11:10 AM IST
தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 July 2025 10:48 AM IST
உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு
அமெரிக்கா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை மஸ்க் உருவாக்கி உள்ளார். இதன் வழியே அவர் தன்னுடைய திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
நம்முடைய நாடு வீணாகி கொண்டிருக்கிறது என்றும் கொள்ளையடிக்கப்படும் சூழல் காணப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுவதற்காக அமெரிக்கா கட்சி இன்று தொடங்கப்படுகிறது என அவர் பதிவிட்டு உள்ளார். இதனால், டிரம்புக்கு போட்டியாக எலான் மஸ்க் தன்னுடைய புதிய கட்சியை எந்த அளவுக்கு பயன்படுத்துவார் என பார்ப்பதற்காக அந்நாட்டு மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
- 6 July 2025 10:01 AM IST
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு ஆர்வத்துடன் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- 6 July 2025 10:00 AM IST
நாமக்கல் அருகே தம்பதி ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
சுப்பிரமணி மற்றும் பிரமிளா இருவரும் இன்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டி பகுதியில் ரெயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- 6 July 2025 9:58 AM IST
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி
பா.ம.க.வில் தலைமை நிர்வாக குழு செயல்பட்டு வந்தது. இந்த குழுவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள் தலைமை நிர்வாகிகளாக இடம்பெற்று இருந்தனர்.
இந்த சூழலில் பா.ம.க.வில் தற்போது நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் கருத்து மோதல் போக்கு காரணமாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை நிர்வாக குழுவை அதிரடியாக கலைத்தார்.
- 6 July 2025 9:29 AM IST
டி.என்.பி.எல்.: இறுதிப்போட்டியில் திண்டுக்கல் - திருப்பூர் அணிகள் இன்று மோதல்
இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் திண்டுக்கல்லும், ஒன்றில் (நடப்பு சீசனில்) திருப்பூரும் வெற்றி பெற்றுள்ளன.


















