இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 9 Aug 2025 2:40 PM IST
தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வருவோம் என்று பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 9 Aug 2025 1:49 PM IST
இலங்கை கடற்படை அராஜகம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுடன் சேர்த்து இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 9 Aug 2025 1:45 PM IST
தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அன்வர்ராஜா நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.அன்வர்ராஜா, சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். தற்போது அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த தி.மு.க. இலக்கிய அணித் தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்படுகிறார்.
தி.மு.க. சட்ட திட்ட விதி 31 பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 9 Aug 2025 1:34 PM IST
ஆபரேசன் சிந்தூர்: பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது - உறுதி செய்த விமானப்படை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபரேசன் சிந்தூர் குறித்து பேசிய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், “பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்திய விமானப்படையின் S-400 மூலம் பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று அவர் கூறினார்.
வானில் நடுவில் தாக்கப்பட்ட ஆறு விமானங்களைத் தவிர, இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களில் பாகிஸ்தான் விமானப்படை தரையில் சந்தித்த இழப்புகளையும் ஏ.பி. சிங் உறுதிப்படுத்தினார்.
- 9 Aug 2025 1:16 PM IST
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, ஈரோடு, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (09-08-2025) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 9 Aug 2025 1:12 PM IST
பாமக பொதுக்குழு கூட்டம் - ராமதாசுக்கு மேடையில் ஒரு இருக்கை
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பொதுக்குழுவில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு அன்புமணிக்கு அருகில் மேடையில் ஒரு இருக்கை போடப்பட்டுள்ளது
- 9 Aug 2025 1:09 PM IST
பாமக தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வார் - தீர்மானம் நிறைவேற்றம்
2026 ஆகஸ்ட் மாதம் உட்கட்சித் தேர்தல் நடத்தும்வரை, பாமக தலைவர் பதவியில் அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்று மாமல்லபுரம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பொதுச் செயலாளராக வடிவேலு ராவணன் மற்றும் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 9 Aug 2025 12:31 PM IST
ஆணவ படுகொலைகளை தடுக்க தடுப்புச் சட்டம் இயற்றுக - விசிக வலியுறுத்தல்
நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், ஆணவ படுகொலைகளை தடுக்க தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- 9 Aug 2025 12:25 PM IST
2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் - நாசா திட்டம்
2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கில் ஒரு பகுதியாகும்.
நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், அணு மின் நிலையம் அவசியமானதாக கருதப்படுகிறது.
எனினும், பூமியின் வளிமண்டலம் வழியே அணுக்கதிர் பொருட்களை ஏவுவது பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- 9 Aug 2025 11:58 AM IST
பாமக பொதுக்குழு கூட்டம் : அன்புமணி வருகை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது.
பொதுக்குழுவில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி வருகை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் நான்காயிரம் பேர் வரை கலந்து கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.















