கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு டெல்லி காவல் இணை ஆணையாளர் அறிவுறுத்தல்

சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகள் வரவும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு டெல்லி காவல் இணை ஆணையாளர் அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டெல்லி போலீசின் காவல் இணை ஆணையாளர் மிலிந்த் தும்பிரே கூறும்போது, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனையொட்டி, ரெயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அனைத்து பயணிகளும் முன்கூட்டியே வரவும்.

ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு முன்பு வரவும். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் புறப்படுவதற்கு குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்பு வரவும். சர்வதேச விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 3 மணிநேரத்திற்கு முன்பாக பயணிகள் வரவும்.

பாதுகாப்பு சோதனைகளை எளிமையாக மேற்கொள்வது உறுதி செய்யப்படவும், கடைசி நேர அசவுகரியம் ஏற்படாமல் தவிர்க்கவும் மற்றும் சரியான நேரத்தில் பயணம் செய்வதற்கும் ஏதுவாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com