விஜய் பிரசார இடத்துக்கு ரூ.50 ஆயிரம் வாடகை: அறநிலையத் துறை அதிரடி

கோப்புப்படம்
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வரும் 18-ந்தேதி த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலத்தில் வரும் 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேச இருக்கிறார்.
இந்த நிலையில், கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவிடம் த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த 12-ந்தேதி கோவிலின் செயல் அலுவலர் தனலட்சுமி கோவில் நிலத்தில் த.வெ.க. உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளுக்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனால், குறிப்பிட்ட இடத்தில் த.வெ.க. பொதுக்கூட்டத்தை நடத்துவதில் சிக்கல் நீடித்தது.
இந்த இழுபறி நிலைக்கு மத்தியில், விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் தனலட்சுமி கூறியதாவது:-
த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் பிரசாரம் செய்ய அனுமதி கட்டணமாக ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தோம். இந்தக் கட்டணத்தை செலுத்திவிட்டார்கள். மேலும், கூட்டம் முடிந்ததும் கோவில் இடத்தை சுத்தம் செய்து தருவதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.






