இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2024 2:26 PM IST
கேரளாவில் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர் சங்கத்தின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
- 19 Dec 2024 2:17 PM IST
தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்தால் கடும் அமளி ஏற்பட்டது.
- 19 Dec 2024 12:41 PM IST
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அம்பேத்கர் விவகாரம் இன்று எழுப்பப்பட்டது. இதனால், இரு அவைகளில் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் அமளியால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டது என பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி இன்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கார்கே மீது தாக்குதல் நடந்துள்ளது என அக்கட்சி சார்பில் குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது.
- 19 Dec 2024 11:56 AM IST
ராகுல் காந்தி தள்ளிவிட்டார்... காயமடைந்த பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அம்பேத்கர் விவகாரத்தில் இன்று இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளன. நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தள்ளிவிட்டார். அதனால், இந்த காயம் ஏற்பட்டது என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
- 19 Dec 2024 11:28 AM IST
அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் - தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 19 Dec 2024 11:17 AM IST
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு
அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுகிறது என அதன் தலைவர் ஓம் பிர்லா கூறினார். இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவையை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து அறிவித்து உள்ளார். இந்த விவகாரம் எதிரொலியாக, 2-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.











