இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 19 Dec 2024 10:52 AM IST
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2024 10:48 AM IST
மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளரும், பேராசிரியருமான அன்பழகனின் 102-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
- 19 Dec 2024 10:37 AM IST
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் கத்தர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, இந்திய ராணுவமும், ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து கூட்டாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
இதனை தொடர்ந்து வீரர்களும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில், பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
- 19 Dec 2024 10:12 AM IST
அரசியல் சாசனம் மீது நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, அம்பேத்கர் பெயரை தொடர்ந்து கூறுவதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அதாவது, அம்பேத்கர், அம்பேத்கர்... என கூறுவது இப்போது 'பேஷன்' ஆகி விட்டது. கடவுளின் பெயரை இப்படி கூறியிருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்றார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எதிர்க்கட்சிகளுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரை அவர் இழிவுபடுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 11.30 மணியளவில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அது தொடர்பான அக்கட்சியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 Dec 2024 10:06 AM IST
இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.56,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.99-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 19 Dec 2024 9:59 AM IST
வடக்கு காசாவை முற்றுகையிட்டு, இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் அல்-ஆலி அரப் மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மற்றும் ஒரு டாக்டர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர்.
காசா மீது நடத்தப்பட்டு வரும் இஸ்ரேலின் இந்த தாக்குதலால், இதுவரை 45,097 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்து 7 ஆயிரத்து 244 பேர் காயமடைந்து உள்ளனர்.
- 19 Dec 2024 9:22 AM IST
டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அஸ்வின் அதன்பின்பு என்ன செய்ய உள்ளார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா வெளியிட்ட செய்தியில், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய கையோடு அஸ்வின், இந்தியாவுக்கு திரும்ப உள்ளார். மெல்போர்னில் நடைபெறவுள்ள போட்டியில் அஸ்வின் பங்கேற்கமாட்டார் என்று கூறியுள்ளார். இதன்படி, அஸ்வின் இன்று நாடு திரும்புகிறார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றபோதும், கிரிக்கெட் வாழ்வை அவர் முற்றிலும் துறக்கவில்லை. கிளப் அளவிலான போட்டிகளில் விளையாடி திறமையை காட்ட அவர் ஆர்வத்துடன் இருக்கிறார் என கூறப்படுகிறது.
தமிழக அளவிலான ரஞ்சி டிராபி போட்டி தொடர் போன்றவற்றில் அவர் விளையாட கூடும் என கூறப்படுகிறது. 2025-ம் ஆண்டில் ஐ.பி.எல். போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட உள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றது.










