இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 22 Oct 2025 11:34 AM IST
தங்கம் விலை சர்வதேச அளவில் கடும் வீழ்ச்சி
ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082 வரை வர்த்தகம். இது 2013க்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி என கூறப்படுகிறது. அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சி என தகவல் வெளியாகியுள்ளது.
- 22 Oct 2025 11:32 AM IST
கேரளா: பத்தனம்திட்டாவில் குடியரசுத் தலைவர் முர்மு வந்திறங்கிய ஹெலிகாப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அதனை சிறிது தூரம் தள்ளி மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- 22 Oct 2025 11:01 AM IST
9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 22 Oct 2025 11:00 AM IST
ரூ.790 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் சாதனை படைப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தீபாவளித் திருநாளுக்கு இரு நாள்கள் முன்பாக கடந்த 18-ம் தேதி ரூ.230.06 கோடி, அதற்கு அடுத்த நாள் 19-ம் தேதி ரூ.293.73 கோடி, தீபாவளி நாளில் ரூ.266.06 கோடி என மொத்தம் 3 நாள்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சம்பந்தப்பட்ட 3 நாள்களில் பெய்த மழையை விட, மது மழை மிக அதிகம் என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன" என்று கூறியுள்ளார்.
- 22 Oct 2025 10:58 AM IST
ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: இளம்பெண் எடுத்த விபரீத முடிவு
இளம்பெண்ணுடன் சக்திவேல் தனிமையில் நெருக்கமாக இருந்ததை செல்போனில் ஆபாச வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்தார். பின்னர் சக்திவேல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி அந்த பெண்ணிடம் ரூ.3 லட்சம் பறித்துள்ளார். பின்னர் மேலும் ரூ.1 லட்சம் தருமாறு அந்த பெண்ணை மிரட்டினார். ஆனால் அவர் சக்திவேலுக்கு கூடுதலாக பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை அப்பகுதியைச் சேர்ந்த தனது உறவினர்கள் சிலரின் செல்போனுக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அவர்களும் இளம்பெண்ணை மிரட்டினர். இதுகுறித்து இளம்பெண் தனது தாயாரிடம் கூறினார். இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் நேற்று காலையில் தனது தாத்தா வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- 22 Oct 2025 10:57 AM IST
மனைவி தொல்லை: திருமணமான 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு
கர்நாடகா மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் ஆரோஹள்ளி அருகே அன்னதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரேவந்த்குமார் (30 வயது). இவருக்கும், மல்லிகா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வந்த ரேவந்த்குமார் பிடதி ரெயில் நிலையத்திற்கு சென்றார். பின்னா் அங்கு வந்த ரெயில் முன்பு பாய்ந்து ரேவந்த்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
- 22 Oct 2025 10:55 AM IST
விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு மட்டும் பயனளிக்காமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அபரிமிதமான பங்களிப்பை நல்கியுள்ளது.
- 22 Oct 2025 10:48 AM IST
உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இன்று பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து
புதுடெல்லி,
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அமித்ஷாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். பொதுச்சேவையில் அமித்ஷா காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக பலராலும் பாராட்டப்படும் நபராக அமித்ஷா உள்ளார். நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும் அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உள்துறை மந்திரிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தேசத்திற்கான சேவையில் தொடர்ந்து வெற்றி கிடைக்கவும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியையும் இறைவன் வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
- 22 Oct 2025 10:48 AM IST
குத்து விளக்கு ஏற்றி வைத்து இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் குத்து விளக்கை ஏற்றி வைத்து இந்தியர்களுக்கு அதிபர் டிரம்ப் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். தீபாவளி விழாவில் எப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், வெள்ளை மாளிகை துணை பத்திரிகை செயலாளர் குஷ் தேசாய், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ரா மற்றும் டெல்லிக்கான வாஷிங்டன் தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















