இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-06-2025
x
தினத்தந்தி 23 Jun 2025 9:02 AM IST (Updated: 23 Jun 2025 7:32 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • ஆர்எஸ்எஸ் விழாவில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு
    23 Jun 2025 10:31 AM IST

    ஆர்எஸ்எஸ் விழாவில் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

    கோவை: பேரூரில் ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி பாரம்பரிய சிவ வேள்வி பூஜை நடந்தது. பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நயினார் நாகேந்திரன், எஸ்.பி.வேலுமணி பங்கேற்றனர்.

  • இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு
    23 Jun 2025 10:27 AM IST

    இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு

    இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து `ஆப்ரேஷன் சிந்து' நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஜோர்டான்  நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.

  • 23 Jun 2025 10:26 AM IST

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 23 Jun 2025 10:24 AM IST

    குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் முன்பே அறிவித்திருந்தது.

    இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த 17-ம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 5 சட்டசபை தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு
    23 Jun 2025 10:18 AM IST

    டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு - ஜெகன் மீது வழக்குப்பதிவு

    ஆந்திரா முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • 23 Jun 2025 9:38 AM IST

    ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.

    இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்தபடி கோஷம் போட்டனர். ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும், ஈரானை தொடாதே, டிரம்ப் ஒரு போர் குற்றவாளி போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடியும் சென்றனர்.

    ஈரானுடன் மோதலை தொடங்கிய மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றை சுட்டி காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், பாதுகாப்புக்காக போலீசார் பல இடங்களில் குவிக்கப்பட்டனர்.

  • 23 Jun 2025 9:12 AM IST

    சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சனம் விழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனை முன்னிட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.

  • 23 Jun 2025 9:05 AM IST

    8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடந்து முடிந்தன. இதனையடுத்து இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகின்றன.

    அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

  • 23 Jun 2025 9:04 AM IST

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண் 76820) இன்று (திங்கட்கிழமை) மற்றும் 25, 26, 27, 28, 29-ந் தேதிகளில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும்.

    காரைக்கால்-திருச்சி டெமு ரெயில் (வண்டி எண் 76819) இன்று மற்றும் 25, 26, 27, 28, 29-ந் தேதிகளில் காரைக்கால்-திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் மாலை 4.15 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வந்து சேரும். காரைக்கால்-தஞ்சை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56817) இன்று மற்றும் 25, 26, 27, 28, 29-ந் தேதிகளில் பகல் 1 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு 30 நிமிடம் தாமதமாக தஞ்சை வந்தடையும். இந்த தகவலை ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story