இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 25 Aug 2025 9:26 AM IST
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன் பதில்
திருச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, பா.ஜனதா இந்தியா முழுவதும் 1,200 எம்.எல்.ஏ.க்கள், 330 எம்.பி.க்களையும் கொண்ட கட்சி. பா.ஜனதா - அ.தி.மு.க. பொருந்தா கூட்டணி என கூறுபவர்களுக்கு எத்தனை எம்.பி.க்கள், எத்தனை எம்.எல்.ஏ.க்கள், எத்தனை கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்? ஒருவரை பற்றி கூறுவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டும். எப்பொழுது தேர்தல் வந்தாலும் வீட்டிற்கு அனுப்பக்கூடிய அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர். நெல்லையில் அமித்ஷாவின் உரைக்குப் பின்பு எடப்பாடி பழனிசாமி மனவருத்தத்தில் இருப்பதாக கேட்கிறீர்கள். யாரும் மன வருத்தத்தில் இல்லை. தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி இனி அடிக்கடி வருவார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைவார்கள். பலமான கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற வேண்டும் என அவசியம் இல்லை. நிச்சயமாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வரும். தி.மு.க. அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என கேட்கிறீர்கள். தி.மு.க. அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு எம்.ஜி.ஆர். கொள்கையை பின்பற்றுபவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- 25 Aug 2025 9:21 AM IST
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.39 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.10 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.26 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
- 25 Aug 2025 9:18 AM IST
100-வது படத்தோடு ஓய்வு பெற விரும்பும் பிரபல இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரியதர்ஷன்தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதே ஹீரோவுடன் (மோகன்லால் ) தனது கடைசி படத்தை இயக்கி ஓய்வு பெற விரும்புகிறார்.
- 25 Aug 2025 9:14 AM IST
ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம்
சமயநல்லூர் - மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 2 மணிக்கு புறப்படும் ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வண்டி எண்-16845) நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் திண்டுக்கல்-செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படாது.
இதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-16846) வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை (4 நாட்கள்) செங்கோட்டை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குறிப்பிட்ட 4 நாட்களில் திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 25 Aug 2025 9:12 AM IST
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 25.08.2025 இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
முடிச்சூர்: ரங்கா நகர், அன்னை இந்திரா நகர், சாரங்கா அவென்யூ, கேப்டன் சசிகுமார் நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நெடுஞ்சாலை, பேட்டை தெரு, கண்ணகி தெரு, மேட்டு தெரு, பஞ்சாயத்து போர்டு சாலை, சக்ரா அவென்யூ.
பெருங்களத்தூர்: பாரதி அவென்யூ, சித்ரா அவென்யூ, பாலாஜி நகர், குறிஞ்சி நகர், காகபுஜண்டர் நகர், காமராஜர் பிரதான சாலை மற்றும் சடகோபன் நகர்.
தாம்பரம்: திருவேங்கடம் நகர், மேலாண்டை தெரு, தெற்கு தெரு, பூர்ணதிலகம் தெரு, கல்யாண் நகர் மற்றும் வைகை நகர்.
போரூர்: லட்சுமி அவென்யு, முகலிவாக்கம் பிரதான சாலை, ராமச்சந்திரா நகர், பாலாஜி நகர், அன்னை வேளாங்கண்ணி நகர், குமரி நகர், சிவாஜி நகர், ஓம் சக்தி நகர், எம்.ஆர்.கே. நகர், எல்& டி நகர், மாதா நகர்.
- 25 Aug 2025 9:08 AM IST
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது.
இதன்படி, சென்னையில் இன்று (25.08.2025) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.













