கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
Live Updates
- 27 Sept 2025 11:33 AM IST
நாமக்கல்லில் திமுக அரசின் சாதனை விளக்க சுவரொட்டிகள்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளநிலையில், திமுக நிர்வாகிகள் சார்பில் மாநகர் முழுக்க ‘திராவிட மாடல் அரசின் முத்தான திட்டங்கள்’ என்ற தலைப்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
- 27 Sept 2025 11:25 AM IST
விஜய்யை வரவேற்க குவிந்துள்ள தவெக தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்க நாமக்கல்லில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். விஜய்யை வரவேற்க, தவெக கொடியை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
- 27 Sept 2025 11:22 AM IST
விஜயுடன் பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
திருச்சியில் இருந்து நாமக்கல் பிரசாரத்திற்கு செல்லும்போது விஜய்யுடன் பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
- 27 Sept 2025 11:20 AM IST
பிரசார பஸ்சில் புறப்பட்டார் விஜய் - வரவேற்க குவிந்துள்ள தவெக தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்க நாமக்கல்லில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்
விஜய்யை வரவேற்க, தவெக கொடியை கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். தற்போது விஜய் தனது பிரசார பஸ்சில் புறப்பட்டுள்ளார்.
- 27 Sept 2025 10:30 AM IST
தனி விமானத்தில் திருச்சி சென்றடைந்தார் விஜய்
சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றடைந்த தவெக தலைவர் விஜய், கார் மூலம் நாமக்கல் புறப்பட்டார்.
முன்னதாக பரப்புரைக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். இதனைத்தொடர்ந்து திருச்சியிலிருந்து சாலைமார்க்கமாக நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
- 27 Sept 2025 9:08 AM IST
விஜய் பரப்புரை: நாமக்கல்லில் இன்று போக்குவரத்து மாற்றம்
தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய உள்ளதால் நாமக்கல்லில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நாமக்கல் - திருச்செங்கோடு செல்லும் வாகனங்கள் உழவர் சந்தை வழியாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சி செல்லும் வாகனங்கள் புறவழிச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 27 Sept 2025 9:01 AM IST
கரூரில் மதியம் 3 மணிக்கு தொண்டர்கள் மத்தியில் விஜய் பிரசாரம்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. த.வெ.க. சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த பகுதிகள் மிகவும் குறுகலான பகுதி என்பதாலும், மக்கள் கூடும்போது நெரிசல் ஏற்படும் என்பதாலும் அந்த பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க முடியாது என போலீசார் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை த.வெ.க.வினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், கூட்டத்தை நடத்த போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பிரசாரம் நடைபெறும் இடத்தில் சென்டர் மீடியன் பகுதிகளில் பதாகைகள் வைக்கக்கூடாது. தொண்டர்கள் சென்டர் மீடியன் மீது ஏறி நிற்கக்கூடாது. பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் எல்.இ.டி. திரை மற்றும் மேடை அமைக்கக்கூடாது என்பன உள்பட 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி கரூரில் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு விஜய் தொண்டர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
- 27 Sept 2025 8:47 AM IST
3-ம் கட்ட மக்கள் சந்திப்பு - நாமக்கல் புறப்பட்டார் விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். திருச்சி செல்லும் அவர் பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாமக்கல்லுக்கு செல்கிறார். அங்கு சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் அருகே பிரசாரம் மேற்கொள்கிறார்.
- 27 Sept 2025 8:36 AM IST
விஜய் பிரசாரத்துக்கு போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்
நாமக்கல்லில் இன்று (சனிக்கிழமை) விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது பிரசாரத்திற்கு 20 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
அதன்படி, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தக் கூடாது. கட்சி தலைவர் விஜய் வரும் வாகனத்தின் பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக செல்லக்கூடாது. விஜய் வரும் வழியிலும், பிரசாரம் நடைபெறும் இடத்திலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் முதியவர்கள் சிக்கிக் கொள்ளாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது.
பிற சாதியினர் மற்றும் மதத்தினர் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது.
பரப்புரையின்போது பொது சொத்திற்கோ, தனியார் சொத்திற்கோ சேதம் ஏற்படுத்தக் கூடாது. மீறினால் கட்சியினரே பொறுப்பேற்க வேண்டும். உயரமான கட்டிடங்கள் மற்றும் மின்சார கோபுரங்கள் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மேலும் பிரசாரத்திற்கு வரும்போதும், பிரசாரம் முடிந்து செல்லும் போதும் "ரோடு ஷோ" நடத்தக்கூடாது என்பன உள்பட 20 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 27 Sept 2025 8:33 AM IST
நாமக்கலில் இன்று பரப்புரை செய்கிறார் தவெக தலைவர் விஜய் - குவியும் தொண்டர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து காலையில் விமானம் மூலம் திருச்சிக்கு கிளம்பினார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாமக்கல்லுக்கு செல்கிறார். அங்கு சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் அருகே பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் நாமக்கலில் இன்று பரப்புரை செய்ய உள்ள நிலையில், அங்குள்ள கே.எஸ்.திரையரங்கம் முன்பு தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.




















