இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 27-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Oct 2025 10:29 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; உயிரிழந்த 37 பேரின் குடும்பத்தினரை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட விஜய்
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி த.வெ.க. சார்பில் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இந்நிலையில் இந்த சந்திப்பு இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 27 Oct 2025 10:24 AM IST
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் நேரில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அவர்களுக்கு ஆறுதலும் தெரிவிக்கிறார். இதனை முன்னிட்டு, த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் மாமல்லபுரம் வருகை தந்துள்ளார்.
- 27 Oct 2025 10:11 AM IST
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை; தாம்பரத்தில் போக்குவரத்து பாதிப்பு
புயல் மற்றும் பருவமழையை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், தாம்பரம், கிண்டி மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, கனமழையால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- 27 Oct 2025 10:04 AM IST
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன். இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர்.
இந்த நிலையில், கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.
- 27 Oct 2025 10:02 AM IST
தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.
- 27 Oct 2025 9:40 AM IST
சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள மோந்தா புயல்
புயலானது 3 மணிநேரத்திற்கும் மேலாக மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. இந்நிலையில், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து 600 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், ஆந்திராவின் காகிநாடாவில் இருந்து தெற்கு-தென்கிழக்கே 680 கி.மீ. தொலைவிலும் புயலானது நிலை கொண்டிருந்தது. இந்நிலையில், காலை 8.15 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 550 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கே நிலை கொண்டுள்ள புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி வங்கக்கடலின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியின் மேல் தொடர்ந்து நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலை முன்னிட்டு ஆந்திராவின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை (28-ந்தேதி) ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
- 27 Oct 2025 9:35 AM IST
புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்பட தமிழக துறைமுகங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகம் என மொத்தம் 9 துறைமுகங்களில் கடந்த 25-ந்தேதி அன்று 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இந்நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது.
- 27 Oct 2025 9:33 AM IST
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















