இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-09-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 28 Sept 2025 11:35 AM IST
தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் - உதயநிதி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது.
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்த துயரத்தை தாங்க முடியவில்லை. 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது த.வெ.க.வினரின் கடமை. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- 28 Sept 2025 11:33 AM IST
திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம்
ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெற்ற மண்டபம் பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- 28 Sept 2025 11:31 AM IST
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் - விசாவை ரத்து செய்த அமெரிக்கா
அமெரிக்க ராணுவ வீரர்கள் டிரம்ப்பின் உத்தரவுக்கு இணங்கக்கூடாது என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ தெரிவித்திருந்தார்.
- 28 Sept 2025 11:30 AM IST
என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- 28 Sept 2025 11:28 AM IST
கரூர் துயர சம்பவம் எதிரொலி.. தவெக தலைவர் விஜய்யின் அடுத்த வார பயணத்திட்டம் ரத்து
தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 28 Sept 2025 11:27 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; கோர்ட்டில் முறையிட த.வெ.க. முடிவு
சென்னை ஐகோர்ட்டில் முறையிட த.வெ.க.வினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 28 Sept 2025 11:26 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
தவெக கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் மாநில கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். மத்திய அரசு ஏற்கனவே அறிக்கை கேட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் கவர்னரும் அறிக்கை கேட்டுள்ளார்.
- 28 Sept 2025 10:54 AM IST
பிரபாஸின் 'தி ராஜா சாப்' பட டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
- 28 Sept 2025 10:28 AM IST
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் - இர்பான் பதான்
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- 28 Sept 2025 10:23 AM IST
அரசியல் தலைவர்கள் பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல - எடப்பாடி பழனிசாமி
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல.
அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால், கட்சி, காவல்துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிப்பால் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அரசும், காவல்துறையும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
















