இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 31-10-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 31 Oct 2025 9:10 AM IST
அணு ஆயுத சோதனையில் இறங்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்கா வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது. ரஷியா 2-வது இடத்தில் உள்ளது. சீனா 3-வது இடத்தில் உள்ளது. ரஷியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளால் 5 ஆண்டுகளுக்குள் அது அமெரிக்காவை ஈடு செய்யும். மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை சோதிப்பதால், நமது அணு ஆயுதங்களை சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு ராணுவத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். அந்த செயல்முறை உடனடியாகத் தொடங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- 31 Oct 2025 9:07 AM IST
நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக தங்க கவுன்சில் தகவல்
இந்தியாவில் இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது. அதன் தரவுகளின்படி, 2-ம் காலாண்டில் தங்கத்தின் மொத்த தேவை கடந்தாண்டின் 248.3 டன்னிலிருந்து 209.4 டன்களுக்கு குறைந்தது. இது 16 சதவீதம் குறைவாகும்.
ஆனால், விலை அடிப்படையில் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது (கடந்த ஆண்டு ரூ.1,65,380 கோடி) உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக உள்ள இந்தியாவில் தங்க நகை தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக வீழ்ந்தது.
- 31 Oct 2025 9:04 AM IST
பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.









