விருதுநகரில் சோகம்.. தூணுடன் இரும்பு கேட் விழுந்து 2 பெண் குழந்தைகள் பலி

2 பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி-ராஜேஸ்வரி தம்பதி. சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ராஜேஸ்வரிக்கு 11 வயதில் கவின் என்ற மகனும், 9 வயதில் கமலிகா என்ற பெண் பிள்ளையும் உள்ளனர்.
இந்நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பெண் காவலர் ராஜேஸ்வரியின் சகோதரியான சங்கரன்கோவிலை சேர்ந்த தனலட்சுமி தனது 6 வயது மகன் நிஷாந்த் மற்றும் 4 வயது மகள் ரிஷிகாவுடன் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். ராஜேஸ்வரியின் வீட்டின் முன்பாக உள்ள கேட்டில் கமலிகாவும், ரிஷிகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கேட்டுடன் சுவர் சரிந்து விழுந்ததில் கேட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் கமலிகா மற்றும் ரிஷிகா ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே ஓடி வந்து பார்த்தபோது குழந்தைகள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
உடனே அவர்களை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 சிறுமிகளுக்கும் முதல் உதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிகளை பரிசோதனை செய்த டாக்டர், இருவரும் வரும் வழியில் இறந்ததாக கூறினார். இந்த விபரீத சம்பவம் குறித்து, பணிக்கு சென்றிருந்த ராஜேசுவரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார். சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பவம் நடந்த வீடு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும், தரமாக கட்டப்படாததால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.






