மதுரை-ராமேஸ்வரம் இடையே நாளை ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்

மதுரை-ராமேஸ்வரம் ரெயில்பாதை மின் மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை,
மதுரை-ராமேஸ்வரம் இடையே பராமரிப்பு பணிக்காக பகல் நேரங்களில் நிறுத்தப்படும் ரெயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் என மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை-ராமேஸ்வரம் ரெயில்பாதை மின் மயமாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது மின்சார இன்ஜின் கொண்ட ரெயிலை அதிவேகமாக இயக்குவதற்கான மேம்பாட்டு பணிகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது. இது தவிர பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 12 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56724) ரத்து செய்யப்பட்டு 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
திருச்சி-ராமேஸ்வரம் ரெயில் (வண்டி எண்: 16849) மானாமதுரை வரை இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் மானாமதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி செல்கிறது. இந்த நிலையில், நாளை (ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப் பட்டுள்ளதால் மேற்கண்ட ரெயில்கள்வழக்கம் போல் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






