திருச்சி சிறை பஜாரில் தீபாவளி பலகார விற்பனை

தீபாவளி பண்டிகையின்போது கைதிகள் தயாரிப்பில் விற்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள் சிறை பஜார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் மிகவும் பழமையானது திருச்சி மத்திய சிறை. சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில் ஆரம்பத்தில் கருவேல மரங்கள் மற்றும் புதர் மண்டிய காடாய் காட்சி அளித்த நிலத்தை கைதிகள் செம்மைப்படுத்தி காய்கறி தோட்டங்கள் அமைத்தது முதல் சீர்திருத்த நடவடிக்கையாக கருதப்பட்டது. நாளடைவில் கைதிகளின் உழைப்பால் செங்கரும்புகளும் விளைவிக்கப்பட்டு, அவை பொங்கல் பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது கடந்த சில வருடங்களாக தீபாவளி பண்டிகையின்போது கைதிகள் தயாரிப்பில் விற்கப்படும் பூந்தி, லட்டு, சிவப்பு லட்டு, ஸ்பெஷல் லட்டு, பாதுஷா, மைசூர் பாக், திருநெல்வேலி அல்வா மற்றும் சாதாரண மிக்சர், ஸ்பெஷல் மிக்சர், ஆந்திரா முறுக்கு, மிளகு காரம், ஓமம் காரம், ஓலை பக்கோடா, பட்டர் முறுக்கு போன்ற கார வகைகள் சிறை பஜார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக தயாரிக்கப்பட்ட லட்டு, அல்வா உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் சிறை பஜாரின் முன்பகுதியை அலங்கரிக்கிறது. இந்த இனிப்பு மற்றும் கார வகைகளை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.






