டங்ஸ்டன் திட்டம் ரத்து: தி.மு.க. அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - எடப்பாடி பழனிசாமி


டங்ஸ்டன் திட்டம் ரத்து: தி.மு.க. அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி - எடப்பாடி பழனிசாமி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 23 Jan 2025 7:15 PM IST (Updated: 23 Jan 2025 7:15 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க. அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன்.

இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும், மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் "டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்" என்ற வாசகம் பதித்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் தி.மு.க.-வின் கபட நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேட நாடகமாடி மக்களை ஏமாற்ற முயற்சித்த மு.க.ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story