‘த.வெ.க. கொள்கை அடிப்படையில் அரசியல் செய்யவில்லை’ - சரத்குமார் விமர்சனம்

எஸ்.ஐ.ஆர். குறித்து முழுமையாக புரிந்து கொண்டு த.வெ.க.வினர் பேச வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை எழும்பூரில் பா.ஜ.க. நிர்வாகி சரத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 16-ந்தேதி த.வெ.க. ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது சரத்குமார் கூறியதாவது;-
“ஒரு புதிய இயக்கத்தை தொடங்கும்போது அந்த இயக்கத்தை நாம் எப்படி வழிநடத்தப் போகிறோம், எதை நோக்கி பயணிக்கிறோம் என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும். மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதைவிட்டு, சாதாரண அரசியலை பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் போராட்டம் நடத்துவதால் நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்பதுபோல் செயல்படுகிறார்கள்.
அவர்கள் கொள்கை அடிப்படையில் அரசியல் செய்யவில்லை. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) குறித்து முழுமையாக புரிந்து கொண்டு பேச வேண்டும். த.வெ.க.வினர் அதை முழுமையாக புரிந்து கொண்டுதான் பேசுகிறார்களா என்பது தெரியவில்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






