திருவாரூரில் அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிக்கடை மூலம் பட்டாசுகள் விற்பனை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அனுமதி இல்லாமல் வெடி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் அருகே உள்ள பவித்திரமாணிக்கம் பகுதியில் வீட்டில் பட்டாசுகள் வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் துர்காராணிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பாண்டியன் மற்றும் இளங்கோ ஆகிய 2 பேரின் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனையில் பாண்டியன் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் இளங்கோ வீட்டில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீசார் பாண்டியன் (வயது53) மற்றும் இளங்கோ (56) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.






