‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 22.1.2026 முதல் 8.2.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதல்-அமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய அளவில் தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000/- பரிசுத் தொகையும், மாவட்ட அளவில் தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.6,000/- பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.4,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- பரிசுத் தொகையும், மாநில அளவில், அணி பிரிவில் முதல் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.75,000/- பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.50,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.25,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.
இதற்காக முதல்-அமைச்சர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக மொத்தம் 16,52,88,000 ரூபாயும், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசு தொகையாக மொத்தம் 3,72,96,000 ரூபாயும், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு பரிசு தொகையாக மொத்தம் 22,50,000 ரூபாயும் என மொத்த பரிசு தொகையாக 20,48,34,000 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார் .
தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் 16 வயது முதல் 35 வயது வரையிலான தகுதியுடைய அனைத்து இளைஞர்களும் பங்கேற்கும் வகையில் ஒன்றிய அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அணிகள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் தடகளம் - 100 மீட்டர் மற்றும் குண்டு எறிதல், கபாடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
மேலும் மாவட்ட அளவில் ஓவியம், கோலப்போட்டிகள் மற்றும் உடல்சார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் அதேபோன்று செவிசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுகக்கு 4 பிரிவுகளாகவும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மாவட்ட அளவில் முதலிடத்தை பெறும் பெண்களுக்கான கபாடி அணி மற்றும் ஆண்களுக்கான ஸ்ட்ரீட் கிரிக்கெட் அணியினர்களுக்கு மட்டும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயதுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in / www.cmyouthfestival.sdat.in வாயிலாக 6.1.2026 முதல் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள் 21.1.2026 ஆகும்.
இந்தநிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படவுள்ள முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை இன்று (6.1.2026) தொடங்கி வைத்தார்.
இந்த முன்பதிவினை விளையாட்டு வீரர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ அல்லது தங்கள் கிராம ஊராட்சி மற்றும் மாவட்டத்தின் வாயிலாக செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி. மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






