வால்பாறை: எம்.ஜி.ஆர். சிலை அருகே அமர்ந்த சிறுத்தைப்புலி

சிறுத்தைப்புலியை பார்க்க சுற்றுலா பயணிகளை சிலர் அழைத்து வந்தனர்.
வால்பாறை: எம்.ஜி.ஆர். சிலை அருகே அமர்ந்த சிறுத்தைப்புலி
Published on

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை வளாகத்தில் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த சிறுத்தைப்புலி எம்.ஜி.ஆர். சிலை அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். பின்னர் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது வைரலாக பரவியது.

ரொட்டிக்கடை பகுதியில் அடிக்கடி சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் குழந்தைகளை வெளியே விளையாட விட தயங்கும் நிலை உள்ளது. ஆனால் சிறுத்தைப்புலியை பார்க்க சுற்றுலா பயணிகளை சிலர் அழைத்து வருகின்றனர்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சிறுத்தைப்புலி வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com