முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.32.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால் திறப்பு

சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரூ.32.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட விக்டோரியா ஹால் திறப்பு
Published on

சென்னை,

விக்டோரியா பொது அரங்கம் எனப்படும் விக்டோரியா ஹால் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாக திகழ்கின்றது. இக்கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவின் பெயரால் பெயரிடப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டிடமாகும். மேலும், சென்னை மாநகரின் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இக்கட்டிடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராபர்ட் சிசோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலையில் நம்பெருமாள் செட்டியாரால் 1888-ம் ஆண்டு இந்த அரங்கம் கட்டப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தார். அதனடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு தளம் கொண்ட இக்கட்டிடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 34 மீட்டர் ஆகும். தற்பொழுது இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டிடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டிடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் முடிவு பெற்றன.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விக்டோரியா ஹாலை இன்று ரிப்பன் வெட்டி, திறந்து வைத்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com