தேர்தல் சின்னம் கேட்டு 6-ந்தேதி விண்ணப்பிக்கிறார் விஜய்?

5 சின்னங்களை தமிழக வெற்றிக் கழகம் தேர்வு செய்து வைத்துள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையில், மக்கள் சந்திப்பை முன்னெடுத்து வந்த த.வெ.க.வுக்கு கரூர் நிகழ்வு தீரா வலியை ஏற்படுத்தி விட்டது. அந்த சோக நிகழ்வில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக த.வெ.க. மீண்டு வருகிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சி பணியாற்ற வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் த.வெ.க.வுக்கு தேர்தல் சின்னம் கேட்டு அதன் தலைவர் விஜய் நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. இதற்காக விசில், பேட், உலக உருண்டை உள்ளிட்ட 5 சின்னங்களை தேர்வு செய்து வைக்கப்பட்டு உள்ளது.
அந்த 5 சின்னங்களில் தேர்தல் ஆணையம் எதை ஒதுக்கினாலும், அதனை பெற்று தேர்தலை சந்திக்க த.வெ.க. திட்டமிட்டு உள்ளது. இதற்காக விண்ணப்பத்தை முறையாக த.வெ.க. பூர்த்தி செய்ய இருக்கிறது. நவம்பர் 6 அல்லது 11-ந்தேதி த.வெ.க. முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்கு சென்று முறையாக விண்ணப்பிக்க இருக்கிறார்கள்.
நவம்பரில் விஜய் தேர்தல் ஆணையத்தில் சின்னம் கேட்டு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் அவருக்கு சின்னம் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை விஜய் முன்னெடுக்க இருக்கிறார்.






