மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க விஜய் திட்டம்


மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க விஜய் திட்டம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 6 Jun 2025 9:15 AM IST (Updated: 6 Jun 2025 9:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில், மக்கள் சந்திப்பு பயணத்தை ஜூலையில் தொடங்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

சென்னை

தமிழக வெற்றிக்கழகம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக கோவையில் பூத் கமிட்டி மாநாட்டை அக்கட்சி நடத்தியது. இதைத்தொடர்ந்து, திருச்சி, வேலூர், தருமபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதனிடையே அவர் நடித்து வரும் கடைசி படமான 'ஜனநாயகன்' படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. எனவே இனி முழு வீச்சில் தமிழகம் முழுவதும் கட்சி வளர்ச்சி பணிகளை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே இருப்பதால், மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்துவதற்கான பணிகளில் விஜய் இறங்கி இருக்கிறார். இதற்கான வழித்தட அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட இருக்கிறார்.

ஜூலை 2-வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி அல்லது மதுரையில் இருந்து இதனை தொடங்கலாமா? என்று விஜய் யோசித்து வருகிறார். இதற்காக பிரசார வேனும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் சந்திப்பு தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை கட்சி மேலிடம் வழங்கியுள்ளது. மக்கள் சந்திப்பு வழித்தடம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார். அதில், 'கட்சி நிர்வாகிகளிடம் கோஷ்டி பூசல் எதுவும் இருக்க கூடாது, அப்படி ஏதாவது இருந்தால் கண்டிப்பாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்.

நமது இலக்கு 2026 என்பதை மறந்து விடாதீர்கள், இலக்கை நோக்கி பயணிப்போம், நம்மை நோக்கி வரும் எதிர்ப்பு கணைகளை பற்றி கவலைப்படாதீர்கள், விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து நேரத்தை வீணாக்க வேண்டாம். நமக்கு இலக்கு மட்டும்தான் முக்கியம்' என்று கூறி இருக்கிறார்.

விஜய் மேற்கொள்ள இருக்கும் மக்கள் சந்திப்பு பயணம் குறித்து நிர்வாகிகள் கூறும்போது, 'தேர்தலுக்கு குறைவான காலமே இருக்கிறது. தற்போது எங்களுக்கு வார்டு மாநாடு, கட்சி ஆலோசனை கூட்டம் என்று பணிகள் நிறைய இருக்கிறது. சென்னையைத் தாண்டி எங்கள் தலைவரின் குரல் கிராமங்களில் ஒலிக்க இருக்கிறது. இந்த மக்கள் சந்திப்பை திருப்புமுனை சந்திப்பாக மாற்றி காட்டுவோம்' என்றனர்.

1 More update

Next Story