தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தொண்டரணி ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது
சென்னை,
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒரு மாத காலத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாதத்திற்குப் பிறகு தான் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, மீண்டும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்புக் காட்டி வருகிறார்.இதனைத் தொடர்ந்து, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜயின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், தவெக தொண்டர் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்க இருக்கிறது.பிரசார பாதுகாப்பிற்காக, ஒரு தொகுதிக்கு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என 468 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
தேர்வு செய்யப்பட்ட தொண்டரணியினருக்கு இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது .விஜய் பிரசாரம் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது தொண்டரணியினருக்கு, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பயிற்சி வழங்கினர்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இன்னும் 10 நாட்களில் மீண்டும் தொடங்க இருக்கிறது.






