ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
Published on

தர்மபுரி,

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2 அணைகளும் முழுமையாக நிரம்பி உள்ள நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து, 28,000 கன அடியில் இருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடையானது தொடர்ந்து 2-வது நாளாக நீடிக்கிறது. இதனிடையே பரிசல் இயக்க தடை விதித்தும் மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். நேற்று காலை முதலே ஒகேனக்கல்லில் மழை பெய்து கொண்டே இருந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com