ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் ஒப்பந்தப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பழைய ஆயக்கட்டில் அரியாபுரம், பள்ளிவிளங்கால், பெரியணை, வடக்கலூர், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் பாசனம் நடைபெறுகிறது. இதை நம்பி நெல், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் செயற்பொறியாளர் சிவக்குமார் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவி வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் சிங்காரவேலன், உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 16-ந் தேதி முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று 2-ம் போக பாசனத்திற்கு இன்று (நேற்று) முதல் அடுத்த ஆண்டு(2026) ஏப்ரல் மாதம் 15-ந்தேதி வரை ஆழியாறு அணையில் இருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1,143 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அணையின் நீர்இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விட அரசு அனுமதி அளித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com