சென்னை கீழ்ப்பாக்கத்தில் கார் மீது தண்ணீர் லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே கார் வந்தபோது, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி திடீரென வலதுபுறமாக திரும்பியது.
சென்னை,
சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வானகரத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் விக்னேஷ், அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய 3 பேர் வானகரம் நோக்கி கீழ்ப்பாக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களது கார் கீழ்ப்பாக்கம் சிக்னல் அருகே வந்தபோது, எதிர்திசையில் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி திடீரென வலதுபுறமாக திரும்பியது. இதனால் கார் மீது தண்ணீர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி விஜய் என்ற இளைஞர் உயிரிழந்தார். மற்ற இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக தண்ணீர் லாரி ஓட்டுநரை கைது செய்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






