‘ஐந்தரை ஆண்டுகளாக நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்’ - ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பேட்டி


‘ஐந்தரை ஆண்டுகளாக நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறோம்’ - ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் பேட்டி
x

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந்தேதி அரங்கேறியது.

இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு 3 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இருப்பினும் பல்வேறு காரணங்களால் இந்த வழக்கின் விசாரணை மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய பென்னிக்ஸின் சகோதரி, கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறோம் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது;-

“கடந்த 2020-ம் ஆண்டு எனது அப்பாவும், தம்பியும் சாத்தான்குளம் காவலர்களால் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அப்பாவையும், தம்பியையும் இழந்து எங்கள் குடும்பமே அனாதையாக நிற்கிறது.

ஐந்தரை ஆண்டுகளாக நீதிக்காக நாங்கள் நீதிமன்ற வாசலுக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். இந்த வழக்கு தற்போது கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டது. அனைத்து சாட்சி விசாரணைகளும் முடிந்துவிட்டன. சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் அனைத்து அவணங்களையும் சமர்ப்பித்துவிட்டனர். இன்னும் 3 மாதங்களில் எங்களுக்கான நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளி ஸ்ரீதருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்ரீதரின் தூண்டுதலின் பேரில்தான் காவலர்கள் எனது அப்பாவையும், தம்பியையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அவர்கள் அலறும் சத்தத்தைக் கேட்டு அவன் ரசித்துள்ளான். என் அப்பா மீதும், தம்பி மீதும் அவன் இரக்கம் காண்பிக்கவில்லை.

ஆனால் அவனுக்கு இரக்கம் பாராட்டி ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். என் அப்பா, தம்பி மீது கொஞ்சம் இரக்கம் காண்பித்து அவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருந்தால் அவர்கள் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்கள்.

இந்த இழப்பில் எங்களுக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களும், சமூக ஆர்வலர்களும் உறுதுணையாக இருந்து வழக்கு நடத்த ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கொலை நடந்து 6 வருடங்கள் ஆகப்போகிறது. எங்களுக்கு விரைவாக நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. நீதிமன்றத்தில் முறையாக நீதிபதி நியமிக்கப்படாததே இந்த தாமதத்திற்கு காரணம். மேலும் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதாக கூறியது உள்ளிட்ட காரணங்களாலும் தாமதம் ஏற்பட்டது.

தற்போது விசாரணை முடிந்துள்ளது. ஆனால் எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எந்த குற்றமும் செய்யாத என் அப்பாவையும், தம்பியையும் அடித்து கொன்றுள்ளார்கள். என் தம்பியின் ரத்தம் காவல் நிலையத்தில் இருந்த தாள்கள், காலண்டரில் எல்லாம் படிந்துள்ளது. அவனுடைய துணியை கழற்றி தரையில் சிந்திய ரத்தத்தை துடைக்க வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு மிருகத்தனமாக இருந்திருக்கிறார்கள். தற்போது குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அவர்களின் குடும்பத்தினரை பார்க்கவும், அவர்களுடன் இருக்கவும் போலீசார் அனுமதிக்கிறார்கள். இதை அவர்கள் மற்றவர்களுக்கு செய்வதில்லையே. போலீசாரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அனைவரும் ஒன்றாக தான் இருக்கிறார்களோ என்ற எண்ணம்தான் வருகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story