மக்களுக்கு தொடர்ந்து உழைக்க, திராவிட மாடல் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் : உதயநிதி ஸ்டாலின்

11 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு 'எல்லோருக்கும் எல்லாம்' என்கிற உயரிய தத்துவத்துடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கோவையில் இன்று நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் சுமார் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.137 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்.
குறிப்பாக, 1500 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு வங்கி கடன் இணைப்புகள் - 1500 பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் - 211 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர்கள் வாகனம் மற்றும் செவித்திறன் கருவிகள் - கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினோம்.
இந்த நிகழ்வின் போது, ரூ.163 கோடி மதிப்பில் பணி நிறைவுபெற்ற திட்டங்களை திறந்து வைத்து, ரூ.32 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம். தமிழ்நாட்டின் மக்களுக்கு தொடர்ந்து உழைத்திட, திராவிட மாடல் அரசு 2.O அமைந்திட ஆதரவு தர வேண்டும்.என தெரிவித்துள்ளார்.






