'எந்த கட்சி காணாமல் போகும் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும்' - எடப்பாடி பழனிசாமிக்கு பெ.சண்முகம் பதிலடி


எந்த கட்சி காணாமல் போகும் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும் - எடப்பாடி பழனிசாமிக்கு பெ.சண்முகம் பதிலடி
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்,

பீகார் மாநில தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களை நீக்கம் செய்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. அதற்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து பிழைப்பு தேடி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வந்திருக்கின்ற போது, சிலமாதம் வெளியூரில் சென்று தங்கி வேலை பார்த்தவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கருதப்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தி, கடந்த மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் செய்துள்ள குளறுபடியை, மோசடியை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளார்.

அடுத்து மேற்கு வங்காளம், அசாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் சோதனை முயற்சியாக பீகாரில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து அனைத்து மாநிலங்களிலும் இப்படி வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.

தேர்தல் கமிஷன் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதற்கு பதிலாக மத்திய பா.ஜனதா அரசினுடைய கைப்பாவையாக மாறி வருகிறது. கள்ள ஓட்டு போடுவது, வாக்காளர் பட்டியலில் மோசடி என்பதை தாண்டி, தேர்தல் கமிஷனே மோசடியானது என்கிற அளவுக்கு நிலைமை மாறி உள்ளது.

தேர்தலுக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு காணாமல் போகும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போகிறதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காணாமல் போகிறதா என்பது தெரியும். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதை போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story