ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - வைரமுத்து


ராமரின் தொன்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்காதது என்ன நியாயம்? - வைரமுத்து
x

கோப்புப்படம் 

தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய மந்திரி ஷெகாவத் கீழடித் தொன்மையை மெய்ப்பிக்க இன்னும் அறிவியல் தரவுகள் தேவையென்று சொல்லித் தமிழர் பெருமைகளைத் தள்ளி வைக்கிறார். ஒரு தமிழ்க் குடிமகனாக மந்திரிக்கு எங்கள் அறிவின் வலியைப் புலப்படுத்துகிறேன். கீழடியின் தொன்மைக்கான கரிமச் சோதனைகள் இந்தியச் சோதனைச் சாலையில் முடிவு செய்யப்பட்டவை அல்ல; அமெரிக்காவில் புளோரிடாவின் நடுநிலையான சோதனைச் சாலையில் சோதித்து முடிவறியப்பட்டவை.

அதனினும் சிறந்த அறிவியல் தரவு என்று மந்திரி எதனைக் கருதுகிறார்? சில தரவுகள் அறிவியலின்பாற் பட்டவை; சில தரவுகள் நம்பிக்கையின்பாற் பட்டவை. ராமர் என்பது ஒரு தொன்மம் அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை; நம்பிக்கையே அடிப்படை. கீழடியின் தொன்மை என்பதற்கு அறிவியலே அடிப்படை.

ராமரின் தொன்மத்தை ஏற்றுக்கொண்டவர்கள் கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது என்ன நியாயம்? தொன்மத்துக்கு ஒரு நீதி; தொன்மைக்கு ஒரு நீதியா? தமிழர்களின் நெஞ்சம் கொதிநிலையில் இருக்கிறது. தமிழ் இனத்தின் தொன்மையை இந்தியாவின் தொன்மையென்று கொண்டாடிக் கொள்வதிலும் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

"தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்ற பாரதியார் பாட்டு எங்கள் முதல் சான்றாக முன்நிற்கிறது. மேலும் பல தரவுகள் சொல்வதற்கு உள்ளன. விரிக்கின் பெருகுமென்று அஞ்சி விடுக்கிறோம். அங்கீகார அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டுகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story