வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை எப்போது? - வெளியான தகவல்


வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை எப்போது? - வெளியான தகவல்
x

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் வழித்தடத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சென்னை,

சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அப்போது ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. தற்போது எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் வழித்தடத்தில் சரக்கு ரெயில் பெட்டிகளை கொண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடத்தில் வருகிற ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டிசம்பரில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் மேலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என்றும், ஜனவரியில் ரெயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, ஜனவரியில் இந்த வழித்தடத்தில் பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story