மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!


மு.க.ஸ்டாலினை 2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது ஏன்?; பிரேமலதாவும் சென்று பார்க்க காரணம் இதுதான்!
x
தினத்தந்தி 1 Aug 2025 2:06 PM IST (Updated: 1 Aug 2025 4:36 PM IST)
t-max-icont-min-icon

"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள்.

சென்னை

"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள். காரணம்.. கட்சியை தொடங்கும்போது கொள்கை, கோட்பாடு என்று தனியாக வகுத்து செயல்படும் கட்சிகள் கூட, தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, "கொள்கை வேறு, கூட்டணி வேறு" என்று சொல்லிக்கொண்டு, அதிகம் 'சீட்' தரும் கட்சிகளுடன் கைகோர்த்துவிடுவார்கள். அதற்கு கடந்த கால தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் கால முந்தைய நிகழ்வுகளே சாட்சி.

அந்த வகையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. ஆளும் கட்சியான தி.மு.க.வும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வும் ஒரு பக்கம் கூட்டணியை வலுப்படுத்தவும், மற்றொரு பக்கம் மக்கள் சந்திப்பு பயணத்தையும் தொடங்கிவிட்டன.

தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது அங்கம் வகித்த கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடர்கின்றன. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணி பலமாகவே உள்ளது.

ஆனால், அ.தி.மு.க.வை பொறுத்த வரை, கூட்டணியும் வலுப்பெறாத நிலையில், உட்கட்சிக்குள்ளேயே பல்வேறு பிளவுகள் ஏற்பட்டுவிட்டன. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழுவை தொடங்கி, "தி.மு.க. ஆட்சியை வீழ்த்த அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்" என்று வலியுறுத்திவந்தார். ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியோ அதற்கு செவி சாய்க்கவில்லை.

கட்சிக்கு உள்ளேயும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி உருவாகியுள்ளது. ஆனால், அ.தி.மு.க.வோ, 'எங்கள் தலைமையில் தனித்து ஆட்சி' என்று கூறிவருகிறது. பா.ஜ.க.வோ, 'கூட்டணி ஆட்சி' என்று சொல்கிறது. இதில் இருந்தே இரு கட்சிகளுக்கும் இடையே இன்னும் ஒத்த கருத்து ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில்தான், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. தலைமையின் உதவியை நாடினார். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திரமோடியையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

ஆனால், அவருக்கு நேரம் ஒதுக்காமல், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை எரிச்சல் அடையச் செய்தது. அதிருப்தியின் உச்சத்துக்கே ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

இந்த நிலையில்தான், நேற்று காலை நடைப்பயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சம்பவம் அ.தி.மு.க. தரப்பையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்தது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்தும், அவரது சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்தும் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையும் நடத்தினார்.

அப்போது, 'நம்மை மதிக்காத பா.ஜ.க. கூட்டணியில் இனியும் இருக்கக்கூடாது' என்று நிர்வாகிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.

மேலும் அவரிடம் நிருபர்கள், "தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் உடன்பாடு உண்டா?" என்று கேட்டனர். அதற்கு அவர், "யாரை வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல. யாரை வாழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்" என்று புரியாத புதிரான பதில் ஒன்றை அளித்தார்.

தி.மு.க. மீது அவர் கரிசனம் காட்டியது, நேற்று மாலையே வெளிச்சத்துக்கு வந்தது. ஒரே நாளில் 2-வது முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வீட்டிற்கே சென்று ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

பிறகு பேட்டியளித்த அவர், "அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. எதிர்காலத்தில், தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம்" என்று பொடி வைத்தே பேசினார்.

இதனால், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்து விடுவாரோ? என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து அவரது ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, "தி.மு.க.வில் எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் இணையமாட்டார். தேர்தல் நெருங்கும்போது அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து அறிவிப்பார்" என்றார்.

2 முறை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதற்கு இடையே, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கட்சி நிர்வாகிகளோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

சந்திப்பு குறித்து பேட்டியளித்த அவர், உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தோம் என்று தெரிவித்தாலும், அப்போது பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துவந்த தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை 'சீட்' ஒதுக்கப்படவில்லை. தனது மகனை எம்.பி.யாக்கிவிடலாம் என்று எதிர்பார்த்திருந்த பிரேமலதா விஜயகாந்துக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே, தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு இருக்கிறது என்பதை காட்டவும் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்து இருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின்போது, "சாலிகிராமத்தில் விஜயகாந்த் இல்லம் இருக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். அவருக்கு மணி மண்டபம் கட்ட அரசு அனுமதியளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

1 More update

Next Story