மெரினா கடற்கரையில் ஆட்டோ டிரைவரை கொலை செய்தது ஏன்? கைதான கல்லூரி மாணவர் பரபரப்பு வாக்குமூலம்

அந்தோணி
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர், நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை கீழ்ப்பாக்கம், சாஸ்திரிநகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி (வயது 33), மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் குடியிருப்புக்கு எதிரே உள்ள மெரினா கடற்கரை பகுதி மணல் பரப்பில் கடந்த 6-ந்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த அந்தோணி மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்டது ஏன்?, கொலை செய்தது யார்? என்று மெரினா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்தோணியை கொலை செய்ததாக நொச்சிக்குப்பத்தை சேர்ந்த ஆகாஷ் (20) என்ற கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். கொலைக்கு துணை புரிந்ததாக மயிலாப்பூர் டும்மிங்குப்பம் பகுதியை சேர்ந்த சாம் ஹெல்கான் (21) என்ற ‘ஜிம்’ மாஸ்டரும் கைது செய்யப்பட்டார். அந்தோணியை கொன்றது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவர் ஆகாஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-
சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நான் பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தேன். எனது தாயார் மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். எனது தாயார் அந்தோணியின் ஆட்டோவில் மார்க்கெட் பகுதிக்கு மீன்களை எடுத்து செல்வார். அப்போது எங்கள் குடும்பத்தோடு அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
அந்தோணி குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி எனது தாயாரிடம் வந்து பணம் கேட்டு தொல்லை கொடுப்பார். இரவு நேரத்தில் எனது தாயாருடன் மெரினா கடற்கரையில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். எனது தாயாருடன் அவருக்கு உள்ள நெருக்கமான பழக்கத்தை எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் ‘கள்ளக்காதல்’ என்று முத்திரை குத்தி பேசினார்கள். அந்தோணியுடன் பேசி பழக வேண்டாம் என்று நான், எனது தாயாரை பலமுறை கண்டித்தேன்.
இந்த நிலையில் எனது குடும்ப மானத்தை காக்க சம்பவத்தன்று இரவு போதையில் மெரினா கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த அந்தோணியின் தலையில் படகு துடுப்புக்கட்டையால் பலமாக அடித்து கொன்றேன். இந்த கொலைக்கு கேரளா மாநிலத்தை சேர்ந்த எனது நண்பர் சாம் உடந்தையாக இருந்தார். டும்மிங்குப்பத்தில் உள்ள சாமின் வீட்டில் அன்று இரவில் தங்கினோம். விடிந்ததும் கேரளா தப்பிச்சென்று தலைமறைவாக திட்டமிட்டோம்.
இந்த கொலையில், எனது தாயாரை போலீசார் பிடித்து சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் கேரளாவுக்கு தப்பிச்செல்லாமல், எனது தாயாரை போலீஸ் பிடியில் இருந்து வெளியில் கொண்டுவர ஆலோசனையில் ஈடுபட்டேன். இதற்கிடையில் போலீசார் என்னை தேடி வந்து கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் ஆகாஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஆகாஷும் அவரது நண்பரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் கூறினர்.






