த.வெ.க. கூட்டணிக்கு செல்லாதது ஏன்..? - டி.டி.வி. தினகரன் பரபரப்பு விளக்கம்

ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
த.வெ.க.வுக்கு வருவேன் என்று கே.ஏ.செங்கோட்டையன் நம்பினார். அவர் என்னை அழைத்தபோது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பார்ப்போம் என்று கூறினேன். அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டுள்ளார். இது என்ன stand என எனக்குப் புரியவில்லை. நான் அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என செங்கோட்டையன் நம்பிக் கொண்டிருந்தார்
அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுகவினர் அழைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார்.
அரசியல் என்பது சதி நிறைந்த துறை. நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றேன். ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். 3 முறை முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எப்படி தி.மு.க.வுக்கு செல்வார். திமுக எப்படி எங்களுக்கு சரி வரும்? அதிமுகவால், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்.
எனக்கு யாரும் அழுத்தம் தர முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே இலக்கு. என்னால் ஒருபோதும் தி.மு.க.வுக்கு போக முடியாது. அ.தி.மு.க.வால், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். அப்படி இருக்கும்போது தி.மு.க. எப்படி எங்களுக்கு சரிவரும். ஜெயலலிதா ஆட்சி அமைய ஓபிஎஸ் எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும் என்பது எனது ஆசை மட்டுமே. நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை எனச் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






