திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தவெக ஏன் பேசவில்லை? - சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம்

அமைச்சர் கே.என்.நேரு ஊழல் பற்றி திமுக இதுவரை வாய் திறக்கவில்லை என்று சி.டி.ஆர்.நிர்மல்குமார் குற்றம் சாட்டினார்.
சென்னை,
சென்னையில் த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக்குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். தலைவரின் ஒப்புதலோடு அது வெளியிடப்படும். அதற்கு நாட்கள் இன்னும் இருக்கிறது. த.வெ.க.வில் வேட்பாளர் மனுதாக்கல் ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும். இன்னும் நேரம் இருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு ஊழல் பற்றி தி.மு.க. இதுவரை வாய் திறக்கவில்லை. இதுபற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும். அமலாக்கத்துறையிடம் இருந்து கடிதம் வந்தும், இன்னும் தி.மு.க. தரப்பில் பதில் வரவில்லை. முதல்-அமைச்சரும் பேசவில்லை. இந்த ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் உத்தரவு நிலுவையில் இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலையும் வரை தி.மு.க. காத்திருந்தது ஏன்?. அரசு தவறான தகவலை வழங்கி கூட்டத்தை அங்கே கூடுவதற்கு காரணமாகிவிட்டது. இதனை முன்பே தடுத்து நிறுத்தி இருக்கலாம். பாரம்பரியமாக பின்பற்றக்கூடிய முறைகளை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுபற்றி நாங்கள் ஆலோசிக்க வேண்டாம் என்று நினைத்தோம். அதில் உத்தரவு முழுமையாக வந்தபிறகு நாங்கள் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






