கடை, கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி

வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடை, கோவிலை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று முன்தினம் அதிகாலையில் வாட்டர்பால்ஸ் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை மாரிமுத்து என்பவரின் வீட்டை சேதப்படுத்தியதுடன், வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2½ வயது குழந்தை ஹேமாஸ்ரீ, மாரிமுத்துவின் தாயார் அசலா ஆகியோரை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வால்பாறை அருகே சோலையாறு அணை பகுதியில் உள்ள காட்டு யானைகள் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 4 வீடுகளை சேதப்படுத்தின. தொடர்ந்து அந்த யானைகள் நேற்று அதிகாலை வெள்ளமலை எஸ்டேட் மட்டம் பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் அதனுடன் சேர்ந்து இருந்த வீடு ஆகியவற்றை உடைத்து சூறையாடின. இதில் வீடு, கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதமானது.
இதேபோல் வால்பாறை சிங்கோனா செல்லும் சாலையோரத்தில் சிறுகுன்றா எஸ்டேட் மாட்டுப்பட்டி பகுதியில் இருந்த முனீஸ்வரன் கோவில் சுவரை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. மேலும் கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடைகளை உடைத்து சேதப்படுத்தின.
நேற்று முன்தினம் காட்டு யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






