செல்போனை உபயோகிக்க கொடுத்த பெண்; நிர்வாண புகைப்படத்தை பார்த்து அத்துமீற முயற்சி - கார் டிரைவர் கைது

பெண்ணிடம் வீடியோ, புகைப்படங்களை காட்டி, நீங்கள் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என கார் டிரைவர் மிரட்டி உள்ளார்.
கோவை,
கோவையை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்த 39 வயதான பெண் கார் வைத்து உள்ளார். அவர் அந்த காரை வாடகை நிறுவனத்துடன் இணைத்தார். இதனால் அதேப்பகுதியை சேர்ந்த சமீர் (வயது 27) என்பவர் அந்த காரின் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார்.
சமீர் வேலைக்கு சேர்ந்த 3-வது நாளில் கார் உரிமையாளரான பெண்ணிடம் சென்று தனது செல்போன் பழுதடைந்து விட்டதாகவும், வாடகைக்கு செல்ல செல்போன் மிகவும் முக்கியமாக இருப்பதால் உங்களிடம் ஏதாவது செல்போன் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டு உள்ளார்.
உடனே அந்த பெண் தனது செல்போனை எடுத்து அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் அழித்துவிட்டு அதை சமீரிடம் கொடுத்தார். அந்த செல்போனை வாங்கிய அவர் அதை பயன்படுத்தி வந்தார்.
2 நாட்கள் கழித்து சமீர் திடீரென்று அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில், நீங்கள் எனக்கு கொடுத்த செல்போனில் உங்கள் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்கள் இருந்தன. அவை அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்களை எனக்கு பிடித்து விட்டது என்று கூறியதாக தெரிகிறது.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எனது புகைப்படங்கள், வீடியோக்களை நீங்கள் ஏன் பார்த்தீர்கள், அந்த செல்போனை உடனடியாக என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறி உள்ளார். ஆனாலும் அவர் அந்த செல்போனை உடனடியாக கொடுக்கவில்லை.அந்த பெண்ணின் கணவர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்ற சமீர், அந்த பெண்ணிடம் வீடியோ, புகைப்படங்களை காட்டி, நீங்கள் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றுக்கூறி மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறினார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் சமீரை பிடித்து குனியமுத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






