அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 30 டன் எடை கொண்ட ராட்சத பாறை அகற்றும் பணி தீவிரம்

அண்ணாமலையார் மலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் உள்ள வீடுகளில் மண் சரிவினால் பாறை கற்களும், மண்ணும் புகுந்து சேதம் ஏற்பட்டது. இதில் ஒரு வீட்டில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையினால் அண்ணாமலையார் மலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றும், அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 5-வது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஆபத்தான நிலையில் சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத பாறை உள்பட சில பாறை கற்கள் இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் திருச்சியை சேர்ந்த பாறைகள் உடைக்கும் வல்லுனர் குழுவினர் நேற்று திருவண்ணாமலைக்கு வந்து ஆபத்தான நிலையில் உள்ள சுமார் 30 டன் எடை கொண்ட ராட்சத பாறையில் துளையிட்டு அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
துளையிட்ட பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ‘ராக் கிராக்’ மருந்து பயன்படுத்தி பாறை வெடிக்க வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ராக் கிராக் மருந்தை பயன்படுத்தினால் பாறை வெடிக்கும் போது அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






