கட்டிட வேலைக்கு சென்றபோது கடித்த நாய்; ரேபிஸ் தொற்று ஏற்பட்டு தொழிலாளி உயிரிழப்பு

நாய் கடித்த பிறகு ஐயப்பன் சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஐயப்பன்(வயது 31). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கட்டிட வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அந்த வீட்டில் வளர்த்த நாய் திடீரென ஐயப்பனை கடித்துள்ளது.
இருப்பினும் ஐயப்பன் இது தொடர்பாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஐயப்பன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று ஐயப்பன் உயிரிழந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் நாய் கடித்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






