சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கேரளத்தில் கொடிய வறுமையில் வாடிய 64,006 குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில் கொடிய வறுமையை ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை வரும் நவம்பர் ஒன்றாம் தேதி, கேரள மாநிலம் உருவாக்க நாளில், அம்மாநிலம் பெறவிருக்கிறது. இதற்காக கேரள அரசுக்கு பாராட்டுகள்.

கேரள அரசின் இந்த சாதனைக்கு காரணமாகவும், ஆதாரமாகவும் இருந்தது அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். கேரளத்தில் கொடிய வறுமையை ஒழிக்க முடிவு செய்த அம்மாநில அரசு, அதற்கான காரணிகளை கண்டறிய மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அந்தக் கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 64,006 குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும், அக்குடும்பங்களில் ஒரு லட்சத்து 3,099 பேர் இருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் மைக்ரோ திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதன் பயனாகத் தான் அங்கு வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த சாதனை தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. ஆனால், வறுமையை ஒழித்து வருவதாக விளம்பரமும், ஆரவாரமும் மட்டுமே செய்யும் திமுக அரசு, இன்று வரை வறுமையை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? என்ற புள்ளிவிவரம் கூட அரசிடம் இல்லை. அதற்குக் காரணம் தரவுகளைத் திரட்ட எந்தக் கணக்கெடுப்பையும் திமுக அரசு நடத்தாதது தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து தீர்வு காண பொருளாதாரக் கணக்கெடுப்பு அவசியம். அதைத் தான் கேரள அரசு செய்திருக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம். இவை அனைத்தையும் ஒன்றாக கண்டறிந்து தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு எனப்படும் சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையானத் தேவை ஆகும். அதைத் தான் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதன் தேவையை உணர திமுக அரசு மறுக்கிறது.

அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் குறைகளையும், நோய்களையும் கண்டறிவதற்கான ஆய்வு தான். அதைச் செய்யாமல் சமூகத்தின் நோய்களுக்கும், குறைகளுக்கும் மருத்துவம் செய்ய முடியாது. அந்த அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதை செய்தால் தங்கள் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதிகள் அனைத்தும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது.

சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது. சீனி சக்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது. இந்த உண்மையை திமுக அரசு உணர வேண்டும். உணர்ந்த பின், கடந்த நான்கரை ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com