செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் விரக்தி... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் விரக்தி... இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கோப்புப்படம் 

வேலூரில் செல்போன் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

வேலூர் தொரப்பாடி கே.கே.நகரைச் சேர்ந்தவர் விநாயகம் (33 வயது), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஷோபனா (29 வயது). இருவரும் காதலித்து கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3½ வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளான். ஷோபனா செல்போனில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிக நேரம் பேசியதாகவும், அதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷோபனா வெகுநேரமாக செல்போனில் பேசி உள்ளார். அதனை கண்டித்த விநாயகம் நாளை காலை உன்னுடைய பெற்றோரை வீட்டிற்கு வரச்சொல். அவர்களிடம் நான் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்றனர்.

நேற்று காலை 5 மணிக்கு ஷோபனா எழுந்து வீட்டின் வாசலில் கோலம் போட்டுள்ளார். 5.30 மணியளவில் விநாயகம் தூங்கி கொண்டிருந்த படுக்கையறையின் கதவை அவர் வெளிப்பக்கமாக பூட்டி உள்ளார். கதவு பூட்டப்படும் சத்தத்தை கேட்டு விநாயகம் எழுந்து உடனடியாக கதவை திறக்கும்படி கூறியும், கதவை தட்டிப்பார்த்தும் ஷோபனா திறக்கவில்லை. இதையடுத்து ஜன்னலை திறந்து பார்த்தபோது ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் ஷோபனா தூக்குப்போட்டுக்கொண்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகம் உடனடியாக செல்போன் மூலம் அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து தூக்கில் தொங்கிய ஷோபனாவை கீழே இறக்கினர். பின்னர் படுக்கை அறைக்கதவை திறந்து விட்டனர்.

இதையடுத்து விநாயகம் வெளியே வந்து பார்த்தபோது ஷோபனா இறந்துவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்று ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகம் மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். திருமணமாகி 5½ ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story